பழந்தமிழர் வான் ஆராய்ச்சி



    பழந்தமிழர் வான் ஆராய்ச்சி
 பண்டைத் தமிழும் தமிழனும்:
உலகில் இருந்த 6809 மொழிகளில் ஆறு மொழிகள் மட்டுமே முன்னுரிமை பெற்றுள்ள நிலையில் தொன்மை வாய்ந்தவையாக சீன மொழியும் தமிழ் மொழியும் மட்டுமே உள்ளன.அதிலும் தமிழ் மொழியில் மட்டுமே அதிசயிக்க வைக்கும் காப்பியங்களும் புராணங்களும் சுவடிகளும் கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன.இவற்றை தவிர ஏராளம் உண்டு.
                   “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கும் முன் தோன்றிய மூத்த குடி என்று வழங்கப்படும் நம் தமிழ் மொழியும் தமிழ் இனமும் எப்போது தோன்றியது என அறுதியிட்டுக் கூற இயலாது.
                    நதிகளின் வெள்ளத்தை கட்டுப்படுத்துதல், நீர்ப் பாசன முறை, நெருப்பை உண்டாக்கி கையாளுதல், உலோகங்களை பிரித்துப் பயன்படுத்துதல், விலங்குகளை அடக்கியாள தெரிந்திருத்தல், உழவு , உழவு கருவி செய்தல், நெசவு, வனைதல், போர் துறை, ஆயுத வடிவமைப்பு, தற்காப்பு கலைகள், உலோக வடிவமைப்பு,  நகரமைப்பு, அரசாட்சிமுறை,  நாவாய் அமைத்தல், மருத்துவம், காலநிலை அறிதல், வானியல் இவற்றிலெல்லாம் தமிழர்களுக்கிருந்த ஆளுமைத் திறனை நாம் கல் வெட்டுக்கள் மூலமாகவும், பண்டைத் தமிழ் இலக்கியங்கள் மூலமாகவும் அறிந்து கொள்ள முடியும். பின்வரும் கட்டுரையில் நாம் தமிழர்களின் வானியல் அறிவை அறிந்து கொள்வோம்.
சங்கத் தமிழனின் வானியல்:
                       சங்கத் தமிழர்கள் வானத்தையே தம் வீட்டின் மேற்கூரையாகக் கொண்டவர்கள். வானத்தில் நாள்தோறும்  நிகழும் வானியல் நிகழ்வுகளையும் மாற்றங்களையும் கூர்ந்து ஆராய்ந்து வானியல்  தொடர்பான சிந்தனைகளை இவ்வுலகிற்கு எடுத்தெம்பியவர்கள்.
              சிலெட்டர் எனும் வானியல் அறிஞர் தமிழனுடைய வானநூற் கணிதம் முறையே உலகில் வழக்கிலுள்ள எல்லா கணிதங்களிலும் நிதானமானது என்று உரைத்துள்ளார்.
              பழங்காலத்தில் தமிழ் வானியல் விஞ்ஞானிகளாக கணியர்கள் கருதப்பட்டனர். சங்கத் தமிழர் ஐம்பெரும் பூதங்களின் தோற்றங்களை வெளிப்படுத்தும் போது பரந்த விரிந்த வானத்திலிருந்து காற்றும், காற்றிலிருந்து தீயும், தீயிலிருந்து நீரும்,  நீரிலிருந்து நிலமும் தோன்றின எனும் கருத்து உலகில் பதிவு செய்துள்ளன்ர். இக்கருத்து பரிபாடல் எனும் செய்யுளில் குறிப்பிடப் பட்டுள்ளது.
               ஞாயிறை (சூரியன்) ஒன்பது கோள்கள் சுற்றி வருகிறது எனும் கருத்தின் மூலத்தை சிறுபாணாற்றுப்படை எனும் செய்யுளில் காண முடியும்.
            
தமிழர் வானாராய்ச்சியில் நன்கு தேர்ந்திருந்தார்கள். மொகன்சதாரோ முத்திரைகளில் கிடைத்த குறிப்புகளால் தமிழர் தொன்மையே வான சாத்திரத்தை நன்கு அறிந்திருந்தார்கள் என்பது புலனாகும். இவர்கள் செய்த கடல் பயணங்களின் வழிகாட்டியாக விண்மீன்களின் இருப்பிடத்தை கணித்துப் பயன்படுத்தியுள்ளனர். சந்திரனது இயக்கத்தை வைத்து மாதங்களை கணித்துள்ளனர்.

     மேலும் தமிழர்களின் வானியல் அறிவானது இலக்கியத்துடன் கலந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான கருத்துக்கள்  நேரடியாகக் குறிப்பிடப் படாமல் உவமைகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
    பாபிலோனியர்கள்,சாலதியர் போன்றவர்கள் தமிழர்களிடமிருந்து வானவியலை அறிந்ததிற்கான சான்றுகளும் உள்ளன.

திராவிடப் படைப்புகள்:
      தமிழில் வானியலுக்காக என மட்டும் குறிப்பிடத்தக்க சில நூல்கள் மட்டுமே உள்ளன. ஏனெனில் தமிழர்களால் இயற்றப்பட்ட அனைத்து இலக்கியங்களிலும் வானியல் தொடர்பான செய்திகள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் நமக்குக் கிடைத்தவை சிலவே. அவற்றில் முக்கியமானவை பின்வருமாறு..
தொல்காப்பியம்
புறநானூறு
நற்றிணை
சீவக சிந்தாமணி
எட்டுத்தொகை
பட்டினப்பாலை
பால காண்டம்
சிலப்பதிகாரம்
திருமுறுகாற்றுப்படை
பரிபாடல்
புறம்
சிறுபாணாற்றுப் படை
சூளாமணி
பத்துப் பாடல்
சிலம்பு
பதிற்றுப் பத்து
பெரிய ஞானக்கோவை
பெரும் பாணாற்றுப் படை
திருக்குறள்

   இவற்றில் தொல்காப்பியம் மற்றும் புறநானூறு ஆகியவை மிக முக்கியமான குறிப்புகளை உடையவை. மேலும் இந்த நூல்கள் தமிழர்களின் வானியல் திறனை உலகிற்கு பறைசாற்ற வல்லவை.
சோதிடமும் கணியர்களும்:
         கணியன் பூங்குன்றனார், கணி மேதாவியர், பக்குடுக்கை நன் கணியார் முதலியோர் தமிழகத்தில் வானியல் துறையில் பலர் இருந்ததற்கான சான்று பகர்கின்றன. கணியன் என்பவர்கள் தமிழ் நாட்டில் வானியலிலும் அதனடிப்படையில் எழுந்த சோதிடத்திலும் வல்லவர்கள்.  இவர்கள்  கணி, கணியன் என்றும் அழைக்கப்பட்டுள்ளன. அரசர்களின் அவைகளில் பெருங்கணிகள் இருந்தனர். இவர்கள் கால நடப்புகளை ஆராய்ந்து சோதிடம் கூற வல்லவர்கள். கணியன்பூங்குன்றனாரின் பாடல்கள் புறநானூற்றிலும் நற்றிணையிலும் இடம் பெற்றுள்ளன. சோதிடம் என்பது நட்சத்திரங்கள், வால்மீன், கோள்கள், சூரியன் மற்றும் நகரும் திசைகளை கணித்து எதிர்கால நிகழ்வுகளை கூற வகுக்கப்பட்ட முறையாக தெரிகிறது. இது இன்றும் நடப்பில் உள்ள  முறையாகும்.
ஸோடியாக் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பன்னிரு இராசிகளின் அமைப்பு முறை தொல்காப்பியர் காலத்திலும் இருந்துள்ளது.
புலமை பெற்றிருந்த வானியல் அறிஞர்கள்:
                சங்கத் தமிழ் வானியல் அறிஞர்கள் அனைவருமே ஏறக்குறைய புலமை பெற்றிருந்தனர். எனவேதான் அவர்களால் இயற்றப்பட்ட  இலக்கியங்களால் நாம் சிலரை பற்றி அறிந்திருந்தாலும், நாம் அறியாதவர்கள்தான் அதிகமாக உள்ளது.
நாம் அறிந்தவர்களில் சிலர் பின்வருமாறு:
 தொல்காப்பியர்
 கணியர்கள்
 மாணிக்கவாசகர்
 சித்தர்கள்
 திருவள்ளுவர்
 கடலூர் கிழார்
மேலும் பலரின் அடையாளங்கள் அழிந்துவிட்டன. குறிப்பிட்டுச் சொல்லும்படியான தமிழர்களின் உச்சகட்ட நாகரிக வளர்ச்சியாக இருந்த சிந்துசமவெளி, மொகஞ்சதாரோ போன்றவற்றில் அறிஞர்களும் அவர்களின் படைப்புகளும் இருந்துள்ளன. மேலும் அவைகள் அந்நியர்களின் படையெடுப்புகளால் அழிக்கப்பட்டுவிட்டன. நமக்கு இதுவரை கிடைத்துள்ள கல் வெட்டு மற்றும் குறிப்புகளின் படி தொல்காப்பியரே பழமையான வானியல் அறிஞர் ஆவார்.  
மயன்களும் குமரிக் கண்டமும்:  
                தமிழினத்தை பற்றி எழுதும் போது குமரிக்கண்டமும் இன்றியமையாததாகிறது. குமரிக்கண்டம் இன்றைய நிலையில் முழுமையாக நிருபிக்கப்படாத ஒன்றாகவே உள்ளது. ஆனாலும் தொல்காப்பியத்தில் இதனை பற்றிய குறிப்புகள் உள்ளன எனத் தெரிகிறது. மயன்கள் என்பவர்கள் குமரிக்கண்டத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் இனத்தினர் மேலும் மத்திய அமெரிக்காவிலும் வாழ்ந்த குறிப்புகள் உள்ளன. மயன் அண்டவியல் என்பது ஐந்திரம் மற்றும் பிரணவ வேதம் போன்ற நூல்களிலிருந்து பெறப்பட்ட 31 கொள்கைகளை கொண்டதாக உள்ளது. இம் மயன்களின் நூல்கள் கணபதி எனும் சிற்பக் கலைஞரால் மீளுருவாக்கப்பட்டன. மேலும் இவர்களுக்கு அடிப்படையாக தமிழ் சமுதாயம் இருந்திருக்கக் கூடும். இவர்களின் சோதிட முறை , சமுதாய முறைகள் பண்டைய தமிழினத்தை ஒத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கையிலும் மயன்கள் வாழ்ந்ததற்கான தடையங்கள் கிடைத்துள்ளதாக தகவல் உள்ளன. மேலும் மயன்களையும் குமரிக்கண்டத்தையும் ஆராய்ச்சி செய்தால் தமிழினத்தை பற்றிய பல்வேறு தகவல்கள் கிடைக்கலாம் என்பது மறுக்க முடியாத ஒரு செய்தி.
இலக்கியமான வானியல்:
   
                      பண்டைத் தமிழ் வானியலை இலக்கியத்தை தவிர்த்து கூறுவது என்பது இயலாத காரியம். கிடைத்துள்ள குறிப்புகளின் படி தொல்காப்பியர் துவங்கி இன்று வரை இலக்கியம் என்பது உவமைகளை முக்கியமாக உள்ளடக்கியது. இதனால்தான் இன்னும் பல வானியல் தொடர்பான குறிப்புகள் நம் இலக்கியங்களில் நம் கண்முன் இருந்தும் கண்டுபிடிக்கப்பட்ட முடியாதவையாகவே மறைந்து உள்ளது. தமிழ் என்பதே பண்டைய காலத்தில் செய்யுள் வழியாக இருந்த குறிப்பிடத்தக்கது. இலக்கியத்தினூடே செய்யும் பயணம்தான் இதற்கு தீர்வாகும். அனைத்து வானியல் அறிஞர்களுமே இலக்கியவாதிகளாகவும், புலவர்களாகவும் இருந்தனர். தமிழ்ச்சங்கங்களில் இடம் பெற்றிருந்த இவர்களது படைப்புகளில் கால்பங்கு கூட இன்னும் நமது கைக்குகிட்டவில்லை என்பது சோகமான செய்திதான். மேலும் இவர்கள் புலவர்களாகவே கருதப்படுகின்றனரே தவிர அறிஞர்களாக நம் தமிழ் மக்களே ஏற்றுக் கொள்ள தயங்குகின்றனர் என்பது உண்மை. தமிழ் இலக்கியங்கள்தான் நமது தொழில்நுட்பத்தையும் அறிவியல் குறிப்புகளையும் உயிர்ப்பித்து வைத்துள்ளனர்.     
இலக்கியத்தினூடேஒரு பயணம்:
இலக்கியத்தினூடே ஒரு    பயணம் மேற்கொண்டால்தான் வானியலை பற்றி அறிய முடியும் என குறிப்பிட்டிருந்தேன். அதே போல் ஒரு சிறு பயணம் செய்து பார்ப்போம். பின்வருபவனவற்றில் அதிசயிக்கதக்க வகையில் வானியல் அறிவானது இலக்கியத்தினுள் எவ்வாறு புதைந்துள்ளது என்று விளக்கமாக அறிந்து தமிழின் பெருமையை பறைசாற்றுவோம்.
          நமது பேரண்டத்தைப்பற்றி 20-ம் நூற்றாண்டில் தான் நமக்கு ஒரளவு கருத்து புலனானது. இவையெல்லாம் உலக வானியல் அறிஞர்களால் நடந்தது.
             
            8-ம் நூற்றாண்டின் இறுதியில் திருவாதுரில் பிறந்த மாணிக்க வாசகர் 658 பாடல்களுடன் இயற்றிய திருவாசகத்தில் திருவண்டப் பகுதியில் பேரண்டத்தைப் பற்றியான விஷயம் குறிப்பிட்டுள்ளார்.

            அந்த செய்யுளும் பொருளும் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

         அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும்
        அளப் பருந்தன்மை வளப் பெருங் காட்சி
        ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரின்
        நூற்றொரு கோடியின்  மேற்பட விரிந்தன
        இன்னுழை கதிரின் துன் அணுப்புரையச்
        சிறிய வாசகப் பெரியோன் தெரியின்
                                -மாணிக்க வாசகர்
பேரண்டமானது எண்ணிறந்த கோள்களை உடையது. அவற்றின் தன்மையை முற்றிலும் தெரிந்து கொள்ள முடியாது. அவை அழகும் சீரமைப்பும் வியக்கத்தக்கவை. கோடிக்கணக்கில் அவை விரிந்து போகின்றன. என்பவை இந்த பாடலின் கருத்தாகும்.
         இப்பாடலின் மூன்றாம் நான்காம் வரிகள் சூரியனது ஒளிக்கதிர் இருண்ட அறையில் செல்லும் போது அவற்றில் அலைந்து திரிந்து துசுக்கள் போல பேரண்டத்தில் அண்டப் பொருட்கள் கோடிக் கணக்கில் உள்ளன என்று கூறுகிறது.
          நுண்ணியதாக இருந்து பின்னர் விரிவடைந்து கொண்டிருக்கும்  அண்டத்தை மாணிக்கவாசகர் அடி 50-ல் குறிப்பிட்டுள்ளார்.
          இவை அனைத்தும் ஜி.யு.போப் அவர்களால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. அந்த பாடல் வரிகள் பின்வருமாறு,
       நாலுனர் உணரா நுண்ணியோன் காண்க
        மேலொடு கீழாய் விரிந்தோன் காண்க
        அந்தமும் ஆதியும் அகன்றோம் காண்க
        பந்தமும் வீடும் படைப்போன் காண்க
        நிற்பதும் செல்வதும் ஆனோன் காண்க
        கற்படும் இதியில் கண்டோன் காண்க
                                -மாணிக்கவாசகர்
இந்தப் பாடல் வரிகள் உவமைகளாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் பல உவமைகளை கீழே காண்போம்.
   மதியம் கெடுத்த வயமீன் எனத்தம்பி மாழார்ந்து
   உதிதற்கு உரியான் பணியால் உடன் ஆயவாசம்
                               -சீவகசிந்தாமணி : 23
பொருள்:
        நிலவைப் பிரிந்த ரோகிணி போல நந்தட்டன் சீவகனைப் பிரிந்தன்.

   காயம் மீன் எனக் கலந்து கான் திரை மேய
                                -சீவகசிந்தாமணி : 421

பொருள்:
       ஆகாயமும் நட்சத்திரங்களும் போல காட்டில் கலந்து பசுக்கள் மேயும் போது.

    வானம் மீனின் அரும்பி மலர்ந்து  
    கானம் பூத்த காரி எனகோயான்
                             -சீவகசிந்தாமணி : 26
பொருள்:
       வானத்து மீன்கள் போல அரும்பி மலர்ந்து கார் காலத்தில் காடுகள் பூத்தன.
     முந்நீர் நாப்பண் திமிர் சுடர் போலச்
      செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்
      உச்சநின்ற உவவு மதி கண்டு
பொருள்:
         கடல் நடுவே படகில் வைத்த விளக்கு போல செம்மீன் எனப்படும் திருவாதிரை விண்மீனின் ஒளித்திகழும் வானில் உச்சியில் முழுமதி  நின்று தோன்றும்.

  விரவின பரவைப் பன்மீன் மிடைமணிக் கலாபமாக
                                 -சூளாமணி : 1701
பொருள்:
      தீச்சுடரின் நுணி போன்ற 6 விண்மீங்களைக் கொண்டது கார்த்திகை. அவை அங்கி, அழல், ஆறுமின், ஆரல், தழல், எரி.   
  அழல் சேர் குட்டத்து அட்டமி ஞான்று
                               -சிலம்பு 23 :134
பொருள்:
       ஞாயிற்றுக்கு மற்ற பொருட்களை ஈர்க்கும் ஆற்றல் உண்டு என்பதை புறபாடல் 30 பின்வருமாறு குறிப்பிடுகிறது. மேலும் வானில் காற்றில்லாத வெற்றிடம் உள்ளது என்பதையும் குறிப்பிடுகிறது.

    செஞ்ஞா யிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப்
     பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
     வளிதிரிதகு திசையும்
     வறிது நிலை இய காயமும் என்றிவை
     சென்றிளந் தறித்தோர் போல வென்றும்
     இனைத்தென் பாடும் உளரே.
பொருள்:
          பெளர்ணமி அன்று விடி வெள்ளியின் ஒளிபோல் 2000 மடங்கு ஒளியுடன் விண்ணில் நிலவு முழு ஆட்சி செய்யும் அப்போது அது சூரியனுக்கு 180டிகிரி கோணத்தில் நேர் எதிரே இயங்கும் என்பதை,
   குணதிசை மருங்கில் நாண்முதிர் மதியும்
   குடதிசை மருங்கில் சென்று வீழ்கதிரும்
                               -மணிமேகலை : 5-119
   
   விங்கு நீர் அருவி வேங்கம் என்னும்
   ஒங்கு உயிர் மலையத்து உச்சி மீமிசை
   விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
   இருமருங்கு ஒங்கிய…….
                               -சிலப்பதிகாரம் -41
                  
   திருவள்ளுவர் நிலவின் பரப்பில் உள்ள குழிகளை மங்கையர் முகத்தில் உள்ள மருக்களுக்கு ஒப்பிட்டு பார்க்கிறார்.
       அறுவாய் நிறைந்த அவிர்மதிக்கும் போல
       மறுஉண்டோ மாதர் முகத்து,
                                    -வள்ளுவர் 1117:குறள்
சனிக்கோள் காரி எனவும் கரியவன் எனவும் வைம்மீன் எனவும் தமிழர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.
                          16-ம் நூற்றாண்டில் தொலைநோக்கியை கலிலியோ கண்டுபிடித்த பின்தான் சனிக்கோளும் அதன் வளையங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கியங்களில் சனிக்கோள் புகைந்து, வளையம் போல அமைய அப்புகை அதனைச் சூழ்ந்து அமைந்திருப்பதாக எழுதியுள்ளனர் நம் தமிழர். பின்வறுமாறு
இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.

கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்ரினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
                           -நடுகாண்காதை : 105

புறநானூற்றிலும் இக்கருத்து கூறப்பட்டுள்ளது.

        துடிப்புக் கொள்கை என தற்போது அழைக்கப்படும் உலக அழிவை குறிப்பிடும் கொள்கையை திருமூலர் பின்வருமாறு கூருகிறார். திருமந்திரம் எனும் நூலில் அழிப்பு எனும் 40சம் பாடலில்,
         
   இலயங்கள் மூன்றினும் ஒன்றுகற் பாதம்
   நிலையற் றழிந்தமை நின்றுணர்ந் தேனால்
   உலை மெல்லரி போலும் உலகம்
  மலைதந்த மாநிலம் தான் வெந்ததுவே.
                    -திருமந்திரம் : அழிப்பு 408

இதன் பொருள்:
             கற்பாந்தம் என்றால் நூறாயிரங்கோடி ஆண்டுகள். இதன் முடிவிலோ அல்லது அதற்கு சற்று முன்னரோ நேர்கின்ற பேரழிவே மகாப்பிரளயம். இக்கலத்தில் கோள்கள் இடம் பெயர்ந்து ஒன்றுடன் ஒன்று மோதிச் சிதையும். உலையில் இட்ட அரிசி மேலும் கீழும் சுழல்வது போல தடுமாறி நில உலகில் ஐநிலப்பகுதிகளோடு முற்றிலும் அழிந்து முடியும். பூலோகமானது பெரும் பூகம்பங்கள் கொடும் காற்று, எரிகல் வீச்சு போன்றன ஏற்பட்டு அழியும் என்பதே இப்பாடலின் பொருளாகும்.
            அயல் நாட்டு அறிஞர் டாலமியின் புவிமையக் கொள்கை பின்வருமாறு தமிழர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.
        
      வெந்தெறற் கனலியோடு மதிவந்திதரும்..
                                -பெரும்பாணாற்றுப்படை : 17

         மேலும், நிக்கோலஸ் என்ற அறிஞர் சரியாக கணித்துச் சொன்ன ஞாயிறு மையக் கொள்கையை, அதாவது சூரியனை மையமாக வைத்து கோள்கள் நீள்வட்டப்பாதையில் சுற்றுவதை,
        
       வாள் நிற விசும்பிற் கோள்மீன் சூழ்ந்த
        இளங்கதிர் ஞாயிறு
                        -சிறுபாணாற்றுப்படை : 242-243
          
        உலக முவப்ப வலனேர்பு திரிதகு
       பலாபுகழ் ஞாயிறு
                       -திருமுறுகாற்றுப்படை : 1-2        
   
    சூரியனில் நடைபெறும் அணுப்பிணைவு காரணமாக பெரும் வெப்பமும் ஒளியும் வெளிப்படுவதை,
   
 வான மூழ்கிய வயங்கொளி நெடுஞ்சுடர்க்
 கதிர் காய்ந் தெழுந்தகங் கனலி ஞாயிறு
                            -நற்றிணை : 163:9-10
        
     சூரியனின் வடக்கு தெற்கு நகர்வானது சீவக சிந்தாமணியில்,
   
    மாசறு விசும்பின் வெய்யோன்
     வடதிசை அயணம் முன்னி
                        -சீவக சிந்தாமணி
                இதன் பொருள், வடக்கு நோக்கி நகர்வானது பின்பனி, இளவேனில், முதுவேனில் போன்ற காலநிலைகள் உண்டாக காரணமாகிறது என்பதாகும்.
                நெபுலா என்பது மேகத்தை குறிக்கும் இலத்தீன் மொழிச் சொல். இந்த நெபுலாக்களிலிருந்தே நட்சத்திரங்கள் பிறக்கின்றன. அண்ட வெளியின் வளியும், தூசியும் சேர்ந்த திரட்சியே நெபுலா.நெபுலாக்களிலிருந்து எவ்வாறு நட்சதிரங்கள் தோன்றி அழிகின்றனவோ அவ்வாறே இந்த உலகமும் தோன்றி அழிவதை கலிலியோவிற்கு 1500 வருடங்களுக்கு முன்பாக வாழ்ந்த கிரந்தையார் எனும் தமிழ் வானியல் அறிஞர் குறிப்பிட்டுள்ளார்.
                       பரிபாடல் 2:1-1:5-ல் இடம் பெற்றுள்ளது இந்த செய்யுள் பின்வறுமாறு கிரந்தையாரால் இயற்றப்பட்டுள்ளது.

  தொன்மறை இயற்கையின் மதியோ
   மரபிற்றாகப் பசும் பொன்னுலகமும் மண்ணும் பாழ்பட
   விசும்பில் ஊழ் யூழுழ் செல்லக்
   கருவளர் வாந்த்து இசையில் தோன்றி
   உருவறி வாரா ஒன்றன் ஊழியும்
   உந்துவளி கிளர்ந்த ஊழுழ் ஊழியும்
   செந்நீர் சுடரிய ஊழியும் பனியொடு
   தண்பெயல் தலை இய ஊழியும் அவையிற்று
   உணமுறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு
   மீண்டும் பீடுயர் பீண்டி அவற்றிற்கும்
   உள்ளீட இய இருநிலத்து ஊழியும்
   நெளிணிதலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்
   மையில் கமலமும் வெள்ளமும் நுதலிய
   செளிணிகுறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை
                               -பரிபாடல் 2:1-1:5
            
             நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், கமலம், வெள்ளம் எனும் எண்கள் குறிக்கும் கால அளவுகள் கழிந்த பின்பு உயிர்கள் வாழ்வதற்கான
ஏழாவது ஊழி தொடங்கும்.

  
   ஊழி ஏழான ஒருவ போற்றி
                          -தேவாரம் 6:55:8
                என்ற அப்பரின் தேவார அடி போல திருவாசகம், திருமந்திரம் போன்றவையும் தமிழரின் வானியல் அறிவை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.
             பண்டைய தமிழர் இயற்கையை உள்வாங்கி ஆன்மீகத்தை உருவாக்கி கொண்டனர். அவர்கள் கண்ட ஆன்மீகமானது தற்போதைய  நிலை போல கண்மூடித் தனமானது அல்ல. இயற்கையோடு இசைந்ததே இறைவன் என்பதை மற்றவர்களை விட மிக தெளிவாக கிரந்தையார் பரிபாடலில் உணர்த்தியுள்ளர். மேலும்,
                            சங்கத்தமிழர் விண்வெளியை தம் கண்களால் மட்டுமே பார்த்து இவ்வாறு துல்லியமாக கோள்களில் நடக்கும் மாற்றங்களையும் அவற்றின் காலங்களையும் குறித்திருக்க முடியாது.

பண்டைத் தமிழரின் வானியலில்
                  சித்தர்களின் பங்கு:
                           பண்டைய கால காஞ்சியின் மன்னன் தொண்டை மான் இளந்திரையன் ,ரோமசர் என்ற சித்தரிடமிருந்து அண்டவியல் உபதேசம் பெற்றதாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
                     மேலும், சித்தர்கள் பூமியின் வயது, சூரிய குடும்ப தோற்ற மறைவு, அண்டவியல் அலகுகள், அண்டத்தின் வயது மற்றும் ஆயுள் போன்றவற்றை பற்றி குறிப்புகள் எழுதி உள்ளனர்.
       அவை பின் வருமாறு குறிப்பிடப் பட்டு உள்ளது.
           மகா வெடிப்புக் கொள்கை(big bang theory) எனப்படும் கொள்கையை சிவவாக்கியர் என்ற சித்தர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

 சுடர்வதாகி எழும்பியங்கு தூபமான காலமே
 இடர்வதாயிப் புவியும் விண்ணும் ஏகமாய் அமைந்தபின்
 படர்வதாகி நின்றவாதிப் பஞ்சபூத மாகியே
 அடர்வதாகி அண்டம்யாவும் ஆள்வதாக நின்றதே
                           -பதிணென் சித்தர் பாடல்கள்
                      அதாவது, ஒளிமிகுந்த சுடர்விட்ட ஒன்று இடர்பட்டுச் சிதறிய பூமிகளும், கோள்களும் உண்டாகின.மூல பிரகிருதியானது பூமியின் பஞ்ச பூதங்களாகி எங்கும் அடர்ந்து பரவி நின்று அண்டங்களை எல்லாம் ஆள்வதாக நின்றது.
                      இப்புவி அத்திப்பழம் போல் பேரண்டம், அதற்குள் அமைந்த வித்துக்கள் போல சிற்றண்டங்கள், பேரண்டம் ஆயிரத்தெட்டு கூடியது ஒருபுவனம்,
புவனம் 2214 கூடியது ஒரு சாகரம், சாகரம் ஏழு கூடியது ஒரு பதம், இப்படி 814 பதம் கூடியது ஒரு பிரபஞ்சம் என பெரிய ஞானக் கோவையில் பண்டைத் தமிழ்ச் சித்தர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.  

திராவிட வான் ஆராய்ச்சிக் குறிப்புகள்:

                       நில நடுக்கோட்டில் இருந்து ஞாயிற்றின் நிலையையும் புவியின் நிலையையும் அறிந்து மேல்நோக்குநாள் , கீழ்நோக்குநாள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேல் நோக்கு நாளில் கூரை போடுதல் போன்ற பூமிக்கு மேல் செய்யும் வேலைகளையும், கீழ் நோக்கு நாளில் கிணறு தோண்டுதல் போன்ற  நிலத்தின் கீழ் செய்யும் வேலைகளையும் செய்யலாம் எனக் கூறப் படுகிறது.
                              விண்மீங்களின் இருப்பிடத்தை அறிந்து இரவில் மணி அறிவதற்கு தெரிந்து வைத்திருந்தனர் நம் பண்டயத் தமிழர்.
                         “செஞ்ஞாயிற்று வீதியும்,அஞ்ஞாயிற்றினது இயக்கமும் அவ்வியக்கத்தாற் சூழப்படும் உலகமும் காற்று இயங்கும் திக்கும், ஓராதாரமுமின்றி தானே நிற்கும் ஆகாயமும் என்று சொல்லப்பட்ட இவற்றை ஆண்டாண்டு போய் அளந்த்தறிந்தவரைப் போல  நாளும் இத்துணையவை உடையனவென்று சொல்லும் கல்வியையுடையோருமுளர் எனும் பொருட்பட வரும் புறம் 30-ம் பாடலாளும் பரிபாடலின் பதினோராஞ் செய்யுலாளும் தமிழ் மக்களின் வானியற் புலமையை  நாம் அறியலாம்.
               புற நானூற்றுப் பாடலின் துவக்கம் நிலவின் இளம்பிறை என்றும் அதன் முடிவுப் பாடல் மா விசும்பின் வெண் திங்கள் மூ ஐந்தான் முறை முற்ற என்ற வானியல் தொடர்பான செய்திகளையே கருப்பொருளாகக் கொண்டுள்ளது.
                    கோள்களின் நகர்வுகளைக் கணித்தே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகம் போன்ற விழாக்கள் கொண்டாடப் படுகிறது.
                   பால்வெளி அண்டமானது நம் முன்னோரால் வெள்ளி வீதி என இலக்கியங்களில் கூறப் பட்டுள்ளது.
                   புற நானூற்றுப் பாடல்கள் 109,129,229,270,297,396,398 ஆகியவை வானியல் தொடர்பான செய்திகளைக் கொண்டுள்ளன.
                   தாமே ஒளிவிடக் கூடியவை நாள்மீன்கள் எனவும் சூரியனிடமிருந்து ஒளிவிடுபவை கோள்மீன்கள் எனவும் அழைக்கப்படுகின்றன..
                 பயணங்களில் வழிகாட்டுவதற்காக ஒவ்வொன்றும் 4 பகுதிகளாக ( பாதங்கள்) பிரிக்கப்பட்ட 27 விண்மீங்களும் (மொத்தம் 108) 12 இராசி மண்டலங்களும் இருப்பதாக நம் முன்னோர் அமைத்துக் கொண்டனர்.
            தமிழர் வானியலில் மிஸார் நட்சத்திரம் வசிட்டர் எனவும், அல்கோர் நட்சத்திரம் அருந்ததி எனவும் அமைக்கப்பட்டுள்ளது.
                        கணியம்பாடி, கணியனூர்,கணியாக்குறிச்சி,கணியூர் போன்ற தற்போதைய ஊர்கள் அந்தக் காலத்தில் கணியர்களின் பங்கு இன்றியமையாத்தாக இருந்ததை எடுத்துரைக்கின்றன.
         பட்டினப்பாலை (34-38) பாடல்கள் அரிவாள் போல் வளைந்து காணப்படும் சிம்மராசி மண்டலத்திலுள்ள மகம் என்ற விண்மீனின் வடிவைக் குறிக்கின்றன.
              தமிழர்களின் வானியல் முறைப்படி 88 விண்மீன் மண்டலங்கள் உள்ளன. அதில் சூரியன் செல்லக் கூடிய பாதையில் 12 மண்டலங்கள் உள்ளன. அவையே 12 இராசிகளாகக் கருதப் படுகின்றன.
                ராசி மண்டலங்களில் சூரியனின் நகர்வானது எவ்வாறு இருக்கும் என்று வரையறுக்கப் பட்டுள்ளது.
              பரிபாடலில் விண்ணில் ரிசப வீதி , மிதுன வீதி , மேச வீதிகள் உள்ளன. இந்த வீதிகள் ஒவ்வொன்றிலும் நிலவு 9 நாட்கள் கழிக்கிறது. இதில் ஒவ்வொரு ராசி மண்டலத்தையும் 25 நாட்களில் கடக்கிறது எனவும் கூறப்படுகிறது.
             சூரியனின் வடக்கு தெற்கு நோக்கிய பயணங்களை கணக்கிட்டு குறிப்பிட்ட நாளில் கருவறைக்குள் ஒளிபுகும்படி பல வடிவமைக்கப் பட்டுள்ளன.
            தட்சிணாமூர்த்தி எனும் ஞானகுருவின் அருகே நாங்கு சனகாதி முனிவர்களின் சிற்பங்கள் கோவில்களில் இருப்பது , குரு எனப்படும் வியாழன் கோளைச் சுற்றியுள்ள நான்கு கலிலியன் துணைக் கோள்களைச் சுட்டுவதாக இருக்கலாம் என்ற கருத்து உள்ளது.
            நடராஜர் மற்றும் கங்காதரர் போன்ற நடன அமைப்புகள் ஏதேனும் நட்சத்திர கூட்டவடிவமைப்பைக் குறிக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.
            புறநானூற்றின் 229-ம் பாடலில் எரிகல் எனப்படும் விண்வீழ்கல் பூமியின் வளிமண்டலத்தில் மூழங்கியபடித் தீப்பறக்க வீழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது.
                  இன்று நாம் அனைவரும் அறிந்த பிதாகரஸ் கோட்பாடு தமிழரின் கணக்கதிகாரம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.
               புறம் , பரிபாடல் , சிலம்பு நூல்களிலும் தமிழரின் வானியலை பற்றிய அறிவியல் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றின் காலம் கி.மு 3000 முதல் கி.மு 1400 வரை ஆகும்.
                வானியலைப் பற்றி மட்டுமே கூறுகின்ற இந்திய முதல் நூல் தமிழில் உள்ள கணிநூல் வேதாங்க சோதிடம்.
                கடலூர் கிழார் எனும் தமிழ் புலவரின் வானநூல் புலமை பற்றிய சிறப்பான சான்று புறநானூற்றில் பதிவாகி உள்ளது.
                தொல்காப்பியத்தின் கிளவியாக்கத்துள் காலம் என்றால் என்ன என்பதைப் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது.
                  பதிற்றுப் பத்து என்ற நூலில் 27 நட்சத்திரங்களின் மண்டலங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
                       புறம் 229 ல் கடலூர் கிழார் , கடலால் சூலப்பட்டு பூமிக்கே விளக்காக பேரொளியுடன் தீப்பறக்க காற்றால் கிளர்ந்து ஒரு மீன் வானிலிருந்து கீழே விழுந்த்தாக குறிப்பிட்டுள்ளார்.
                 நற்றிணை 5ம் பாடல் , அகநானூறு 13ம் பாடல் , சிலப்பதிகாரம் 14ம் பாடல் ஆகியவை சூரியனின் வடக்கு தெற்கு நகர்வைக் குறிப்பிடுகின்றன.
                சூரியனிலிருந்து வரும் கதிர்களானது வெண்மையான நிறம் உடையது என புற , அக பாடல்கள் குறிப்பிடுகின்றன.
                 செவ்வாய் செல்லும் திசையில் வெள்ளி செல்லாது என பதிற்றுப்பத்து 13:25 ம் பாடல் விளக்குகிறது.
                 பரிபாடல் 11 ம் பாடலில் பாம்பு ஒல்லை மதியம் மறைய என சந்திரகிரகணம் குறிப்பிடப்படுகிறது.
                  பண்டைய காலத்தில் வால் நட்சத்திரங்களை நம் முன்னோர்  “புகைக் கொடி என அழைத்துள்ளனர். மேலும் அதன் வருகை நம் முன்னோர்க்கு புதிராகவும் ஆபத்தாகவும் எண்ணியிருக்கின்றனர்.
                       சூரியனின் நகர்வைக் கணக்கிட்டு பெரிய சூரியக் கடிகாரங்களையும் கட்டிடங்களில் அமைத்திருந்தனர். இதே போன்ற கடிகாரங்களை தற்போதும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் காணலாம்.
தற்காலத் தமிழனுக்கு :
            உலகில் முதன் முதழில் சித்திர எழுத்துக்களை கண்டவன் தமிழன். அதிலிருந்து வட்ட எழுத்து, கோட்டு எழுத்து, நகர்புற நாகரிக எழுத்து என்று பல்வேறு கால சூழலில் பல்வேறு எழுத்துக்களை படைத்தவனும் தமிழன். இவற்றை படைத்ததோடு மட்டுமின்றி உலகெங்கும் அவற்றை பரப்பியவனும் தமிழன்தான்.
            சங்கங்கள் அமைத்து மொழியை வளர்த்தவனும் தமிழன்தான். ஏறத்தாழ 10,000 ஆண்டுகளாய் இந்நிலை இருந்து வந்தது.
             தத்துவங்கள், வேதங்கள் யாவும் தமிழனுக்குமட்டுமே சொந்தமாய் இருந்தன. நாம் இவற்றை காப்பாற்றாதலால் பிறர் பிற எழுத்துக்களில் பொதிந்து வைத்துள்ளனர்.
             அறநூல்களில் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கோட்பாட்டை கொண்டவன் தமிழன். திருக்குறளைக் காட்டிலும் வேறு என்ன வாழ்வியல் நூல் வேண்டும்?
              10,000 ஆண்டுகளுக்கு முன்பே சிந்து சமவெளி ஹரப்பா நாகரிகங்களை உருவாக்கியவன் தமிழன்.
          பிற நாடுகளில் கற்கால நாகரிகமும், செம்பு நாகரிகமும் நிறைவேறாத காலத்திலேயே இரும்பை வடிக்கவும், வார்க்கவும், உருக்கவும் செய்தவன் தமிழன்.
               ரோமபுரி வீதிகளிலும், கிரேக்க நாட்டு சிற்றூர்களிலும் தமிழன் வடித்த வேலும், வாளும், ஈட்டியுமே நிறைந்திருந்தன.
               கடல் கடந்து பெரும்படையுடன் முதலில் உலகை வலம் வந்தவன் தமிழனே. 1000, 1500 ஆண்டுகளுக்கு பின்னறே பிற நாட்டினர் கடலை எட்டிப் பார்த்தனர். 2000, 3000 கிலோமீட்டர் தொலைவுகளுக்கு அப்பால் ஆட்சியை அமைத்தவர் முதலில் தமிழரே.
                பழந்தமிழர்கள் குடியேராத நாடில்லை, தீவில்லை. இட்சிங் என்ற சீனத் துறவி கி.பி 2ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவரது கூற்றுப்படி சீனாவில் 50,000 தமிழ்க் குடியிருப்புகள் இருந்தன.
                இந்தியாவில் உள்ள கல் வெட்டுகளில் 75 விழுக்காடு தென்னிந்தியாவைச் சேர்ந்தவை.
                ஒவ்வொரு அற்புதமான கோவில்களையும் கட்டியது தமிழ் மன்னர்கள் மற்றும் தமிழகக் குடிப்படைகள். ஆனால் உள்ளிலிருந்து நம்மையே தமிழ் மொழியை பாடக்குடாது என்று கட்டளை இடுவது வேறு யாரோ?
               தமிழகம் தெங்கோடியில் உள்ளது. ஆனால் வடகோடி இமயத்தை வென்று 10க்கும் மேற்பட்ட முறை இமயத்தில் கொடியேற்றியவர் தமிழரே. நேபாள், நிரூபத் வழியே ஒரு பல்லவ அரசன் சீனா மீது படையெடுத்த செய்தி, மறைக்கப்பட்ட பல நூறு தமிழர்களின் சாதனைகளில் ஒன்றாகும். சோழர் கணவாய், சேரர் கணவாய் இன்னும் னேபாளத்தில் உள்ளன.
                 மலேசியாவில் கடாரம் கொண்டான் பகுதியில் மலேசிய அரசு ஒரு அருங்காட்சியகம் நிருவி உள்ளது. ஆனல் நாம் நம் தமிழ்ப் பாடப் புத்தகங்களில் கூட இவற்றைக் கூறுவதற்கு தயங்கி நிற்கிறோம்.
                  பூம்புகாரோடு இணைந்திருந்த குமரிகண்டம் 9500 ஆண்டுகளுக்கு முன்னால் கடலில் மூழ்கிய செய்தி இன்னும் நிரூபிக்கத் தடையாக நாமே உள்ளோம்.
                 இலங்கையும் தமிழகமும் அடிக்கடி இணைந்து பிரிந்ததால் பாக்நீரிணைப்புப் பகுதியில் மணல் திட்டுகள் காணப்படுகின்றன. ஆனால் அதை அனுமன் கட்டிய பாலம் என நம்மை முட்டாளாக்க நடந்த முயற்சியை முறியடிக்க அறிவியல் உண்மைகளை நாம்தானே முன் நிறுத்த வேண்டும்.

முடிவில்லாத தமிழ் நாகரிகம்:
                 தமிழன் தெரிந்து கொள்ள வேண்டியவை தமிழினத்தின் பெருமை. அதை உலகிற்கு உரக்கச் சொல்ல வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமை.
                தமிழ் இலக்கியங்களில் சில 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கி.மு 300 ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்தால் எழுதப் பெற்றவைகளாகும். இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 1,00,000 கல்வெட்டு, தொல் எழுத்துப் பதிவுகளில் 55,000 க்கும் அதிகமானவை தமிழில் உள்ளன. பண்டைய புதை நகரங்கள் பல உலகிற்கு வெளிக்கொணரப்படவில்லை.
               இந்த உலகம் எப்படி தோன்றியது என்பதை தமிழன் மட்டுமே தெளிவாகக் கூறியுள்ளான். இந்த உலகம் கடவுளால் படைக்கப்பட வில்லை.அப்படியானல் இந்த உலகம் எப்படி இருக்கிறது? தொல்காப்பியர் சொல்கிறார். நிலம், நீர், தீ, வளி, விசும்பு இந்த 5 ம் கலந்த முயக்கம் தான் உலகம் என்று தெளிவாகக் கூறினார்.
                நமது நாகரிகம் உலகம் முழுவதும் பரந்திருந்த நாகரிகமாகும். பசுபிக் கிழகிந்திய தீவுகள் தொடக்கம் மேற்கே அமெரிக்கா வரையும் மத்திய ரேகைக்கு இருமருங்கிலும் தொடர்ச்சியாக பரந்து கிடந்த நாடுகளிற் பண்டைக் காலத்திலேயே நிலவிய நாகரிகம் இதுவாகும். இந்நாடுகளிற் சில உதாரணமாக அத்திலாத்தியகம் இலேமூரியாவும் கடற்கோளினால் அழிந்து விட்டன. பல நாடுகளில் வடபுல மக்களின் படையெழுச்சியினால் இந்நாகரிகம் அழிக்கப்பட்டு விட்டது.
               பண்டைய எகிப்தியரும் திராவிடமும் ஒரின மக்கள் எனவும் மிக பழைய காலத்திலேயே இம்மக்கள் இந்தியாவிலிருந்து ஸ்பெயின் வரையும் பரவியிருந்தனர் எனவும் பேராசிரியர் கச்சிலி கூறுகிறார்.
              தலைச் சங்க காலமும், இடைச்சங்க காலமும் புதுக்கற்காலமாகும். இதனை தொல்காப்பியம் விவரித்து உள்ளார்.
             உலக மொழிகளில் மூத்த மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும். என்று மொழியியல் அறிஞர் நோவோம் சோம்சுகி அறிவித்துள்ளார்.
              மேலும் பல அறிஞர்கள் இக் கருத்தை வழி மொழிந்துள்ளனர்.
              வானியல் அறிவினைத் தமிழ் மக்கள்தாம் முதன் முதலில் பெற்றிருந்தனர். மேலும் இவர்களின் மூலமாகவே உலகின் மற்ற பகுதிகளுக்கு இந்த அறிவு பகிரப்பட்டது. இதற்கான ஆதாரங்கள் அனைத்தும் படையெடுப்புகளால் அழிக்கப்பட்டன மற்றும் இன்னும் இவையெல்லாம் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே நிசப்தமான உண்மை.
            தற்காலத்து வானியல் அறிஞர் கூறும் அனைத்தும் அக்காலத்திலேயே தமிழக அறிஞர்களால் இலக்கியங்கள் பதிவு செய்யப்பட்டுவிட்டன. அவற்றை ஆய்வு செய்து வெளிக்கொணர வேண்டியது நம் தலையாக கடைமைகளில் ஒன்றாகும்.
              தற்போது தமிழை பேசக்கூடகூச்சப்படும் தமிழர்கள் உள்ளனர். மேலும் இவர்கள் தமிழ் இலக்கியங்களை கடவுளோடு பொருத்திப் பார்த்து மூட நம்பிக்கைகளையே வளர்த்துக் கொண்டுள்ளனர்.
              தொல்காப்பியமும், திருக்குறளும் படைக்கப்பட்ட இடத்தில் நாம் வழித்தோன்றலகளாக வந்துள்ளோம் என்பது நமக்கு பெருமை. இவற்றை நாம் எப்போதுமே அறிவியலோடும் தொழில்நுட்பத்தோடும் பொருத்திப் பார்க்க வேண்டும். அப்போதுதான் உண்மை புலனாகும்.
               இன்னும் கணக்கற்ற படைப்புகள் கண்டுபிடிக்கப் பட வில்லை என்ற சோகம் இருந்தாலும் நிச்சயமாக இந்த நாகரிகம் இன்னும் இலட்சக்கணக்காண ஆண்டுகள் உயிர் வாழ்ந்து முடிவில்லாத நாகரிகமாக சரித்திரத்தில் இடம் பெரும் என்பது உண்மை.

மயன்களின் 31 வானியல் கொள்கைகள்:
          1)பரவெளியில் எப்பொருளும் படைக்கப்பட வில்லை. அனைத்தும் ஒரு மூலப் பொருளின் தோற்ற வெளிப்பாடே.
          2)அம்மூல சக்தியே சில நேரங்களில் ஆதிமூலம் எனவும் பிரம்மன் எனவும் (குவைப் புலக் கோட்பாடு) அழைக்கப்படுகிறது.
          3)இம்மீல சக்தியே தன்னை வெளிப்படு தோற்ற இயல்புக்கேற்ப தன்னை வெவ்வேறு பொருட்களாக வெளிப்படுத்திக் கொள்கிறது.
          4)இந்த தோற்ற ஆதாரமே மூலமேன்றும், மையமேன்றும், புள்ளியென்றும் அறியப்படுகிறது.
          5)இயற்கையில் உள்ள பொருட்கள் அனைத்தும் சக்தியின் உருவமும் ஒன்றிணைந்த தோற்றமே.
          6)கட்டற்ற அண்டவெளி என்பது சக்தியும் பொருளு இணைந்தகளத் தோற்றமாகவும், அண்டத்திலுள்ள அனைத்துப் பொருட்களுக்கு மூலமாகவும் அமைகிறது.
          7)ஓம் என்ற பிறணவமே பார்வையில் ஒளியாகவும், செவிப்புலன்களில் ஒலியாகவும் பரிணமிக்கிறது.
          8)இவ்வண்டத்தின் பொருள்தோற்றம் அனைத்தும் இசையின் தோற்றமாகவோ, மாதிரியாகவோ, உருவமாகவோ அல்லது இசையின் அளவுகோவில் உள்ள வேறு வெளிபாடுகளினாலோ ஆனவை.
          9)காலம் தான் படைத்தாற்றை ஆக்கவும், அழிக்கவும் செய்கிறது.
         10)உருவமற்ற பிரம்மத்தின் முதல் தோற்ற வெளிப்பாடே சதுரமாகும்.
         11)இந்த ஆதி சதுர தோற்றமே உள்ளார்ந்த ஆற்றலின் வரைபடமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதையே வாஸ்து புருச மண்டலம் எங்கின்றனர்.
        12)பரவெளி என்பது கன் ஸ்துரங்களால் ஆனது.      
        13)அந்த கன சதுரமே சிற்றவை(சிற்றம்பலம்) எனப்படும்.
        14)இச்சிற்றவையில் உள்ள செங்குத்தான ஒளிவீசும் பகுதியே ஒளிநூல் ஆகும். இதையே வடமொழியில் பிரம்மசூத்திரம் எங்கின்றனர்.
        15)இவ்வொளி நூலே மூலத்தூண் எனவும், மூலஸ்தம்பம் எனவும் கொள்ளப்படுகிறது.
        16)இவ்வெளி நூல் ஒரு குறிப்பிட்ட தாளத்தில் அதிர்கிறது. இவ்வதிர்வுகளே இயற்கையின் ஒழுங்காக அமைகிறது.
        17)இவ்வதிர்வுகளையே இவ்வண்டம் வெளிப்படுத்துகிறது.
        18)கனசதுர அணுக்களின் மூலக்கூறான சிற்றாகாசமே விண்வெளியின் கருவாகும்.
        19)சிற்றாகாசம் என்பது ஒலிக்கும், ஒளிக்குமுண்டான கலப்பு ஆகும்.
        20)பரவெளி என்பது ஒளியாகவும், அவ்வொளியே அண்டப் பொருட்களுக்கு மூலமாகவும் இருக்கிறது. இவ்வொளியை நுண்பொருள் என தமிழிலும் பிரம்மம் என வடமொழியிலும் கூறுகின்றன.
        21)நுண்பொருள் ஆற்றல் எனும் பிரப்பபாகவும், மூடப்பட்ட வெளியில் உயிர் சக்தியாகவும் இருக்கிறது.
        22)கட்டிடக் கலையே கணக்கியலின் உச்சம்.
        23)கட்டற்ற காலத்தின் இயக்கமே கணக்கியலின் மூலம்.
        24)பரவெளியின் அதிர்வே காலம்.
        25)பரவெளியும் காலமும் ஒன்றே
        26)காலம் என்பது பரவெளியின் ஒரு நுட்பமான வெளிப்பாடு.
        27)காலமே அண்டப் பொருட்கள் அனைத்திற்கும் மூலக்கூறு..
        28)சிற்றாகாசமே பேராகாசத்தின்  முழு அடையாளம்.
        29)பரவெளி தன்னை வெளிப்படுத்த ஒவ்வொரு கணமும் துடிக்கிறது.
        30)ஒரு சிற்பியானவன் தன் உள்மன சக்தியைக் கொண்டு ஓம் என்ற பிரணவத்தை சிற்றாகாசத்திலும் பேராகாசத்திலும் ஒலியாகவும் ஒளியாகவும் உணரத் தெரிந்திருக்க வேண்டும்.
        31)தன் அகயிகத்தை அறியாமல் எவறாலும் புரவெளியின் இயக்கத்தை அறிய முடியாது.
இவை அனைத்தும் மயங்களின் ஐந்திரம் மற்றும் பிரணவேதம் என்ற நூல்களிலிருந்து பெறப்பட்டது.


                 
      


       
                            








































































Comments

Popular posts from this blog

முடிவில்லாத தமிழ் நாகரிகம்

நான் ஏன் சராசரி ?