இது ஒரு தேடலின் ஆரம்பம்...
“என்றைக்கு சினிமா நடிகர்களின் அளவிற்கு நமது அறிவியலாளர்களையும் அவர்களின்
கண்டுபிடிப்புகளையும் நாம் அறிந்து கொள்கிறோமோ, அன்றுதான் ஒரு ஆரோக்கியமான
சமூகமாக நாம் வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்று பொருள்.
-பிரெயின் க்ரீன் ( அமெரிக்க இயற்பியலாளர் )
மேற்கண்ட இவ்வாக்கியங்கள் விரக்தீயின் உச்சத்தில் எழுதப் பட்டவை. பிரெயின்
க்ரீன் ஒரு மிகச் சிறந்த இயற்பியலாளர். அறிவியலை தன்னால் முடிந்த அளவிற்கு
சாமானியனுக்கும் புரியும் வண்ணம் சொல்ல முயல்பவர். அதிக தொலைக்காட்சி
நிகழ்ச்சிகளையும் பொதுக்கூட்டங்களையும் அறிவியலுக்காக ஒருங்கிணைத்தவர்.
அறிவியலை நேசிக்கும் அமேரிக்க இளைஞர்களின் கனவு நாயகன்.இப்படி அமெரிக்க
மக்களால் பாராட்டப் பட்டு இருந்தும் அவரின் எண்ணங்களில் இருந்து உதிர்ந்த
வார்த்தைகள் தாம் இவை.
அமெரிக்கா ஒரு வளர்ந்த நாடு. அதன் மக்கள் தங்களின் தேவைகளையும் அதற்கான
தேடல்களையும் சரியாகப் புரிந்து வைத்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர்
அறிவியலைக் கொண்டாடுகின்றனர். அறிவியலாளர்களைத் தெரிந்து வைத்துள்ளனர்
மேலும் அவர்களை மேன்மையாக மதிக்கின்றனர். இப்படி இருந்தும் அவர்
இவ்வார்த்தைகளைச் சொல்கிறார் என்றால் ஏதோ ஒரு புள்ளியில் அவர் பெற்ற
அனுபவத்தினால்தான். இவர் இப்படி இருக்க , நம் பாரத தேசத்தில் இருக்கும்
அறிவியலாளர்களின் நிலை?
மக்களின் வாழ்க்கைக்கான அன்றாட தேவைகளான உணவு மற்றும் இருப்பிடம் என
அனைத்திலும் அறிவியல் கலந்துள்ளது. இருக்கும் இடத்திற்கும்,சூழலுக்கும்
ஏற்ப இவற்றில் மாற்றமும் அவற்றிற்கான அறிவியலில் மாற்றமும் இருக்கும்.
ஒவ்வொரு நாட்டிலும் வாழும் மக்கள் மற்றும் அவர்களின் சமூகத்திற்கேற்ப
அறிவியலின் தோற்றமும் வளர்ச்சியும் இருக்கும்.
ஒரு கோவிலை எழுப்ப நமக்கு நிறைய சிற்பங்கள் தேவை. இந்த சிற்பங்களை செய்ய
சிற்பிகள் தேவை. இப்படி வெறும் கற்களாகக் கிடந்த ரகசியங்களை சிற்பங்களாக
மாற்றியவர்கள் நம் அறிவியலாளர்கள். நாம் கோவிலைக் காணும்போது சிற்பங்களைச்
செதுக்கியவர்களை மெச்சிப் பேசுவோம்,அவர்களைப் பற்றி அறிய முனைவோம். ஆனால்
இங்கே அறிவியல் எனும் கோவிலைக் காணவே ஆளில்லாத நிலை. சிற்பங்களையும்,
சிற்பிகளையும் எங்கே தேடப் போகிறோம்.
ஆயிரம் ஆண்டுகள் மேல் பழைமையான அறிவியல் நாகரீகம்,எண்ணற்ற
கண்டுபிடிப்புகள்,மனித குலத்தையே புரட்டிப் போட்ட சிந்தனைகள் என நமது நாடு
உலகிற்கு அளித்தவை பல. நாம் அவற்றை புரிந்து கொள்ள கூட வேண்டிய
அவசியமில்லை. குறைந்த பட்சம் தெரிந்து கொண்டிருக்கவாவது வேண்டும். ஒரு
நடிகரைப் பற்றிய விவரங்களையும் அந்தரங்களையும் தேடும் அளவிற்குக் கூட நாம்
நம் அறிவியலாளர்களைப் பற்றி தேடுவதில்லை. கால ஓட்டத்தில் எங்கோ நடந்த ஒரு
தவறு அறிவியலைச் சாமானிய மக்களின் தேவையற்ற ஒன்றாக மாற்றியுள்ளது. தேவையற்ற
பொழுது போக்கான சினிமாவை தேவையான ஒன்றாக திணித்திள்ளது. இது களையப்பட
வேண்டிய ஒன்று.
அதன் சிறு முயற்சியாக மறக்கடிக்கப் பட்ட வெளிக்கொணரப் பட வேண்டிய இந்திய
அறிவியலாளர்களை அறிந்து கொள்ளும் வண்ணம் செய்யப் பட்டதே இந்த வலைத்தளம்.
தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுகிறோம்.
நன்றி.
Comments
Post a Comment