ஒரு உள்முகச் சிந்தனையாளனின் நாட்குறிப்பின் வழியே!




(A WALK THROUGH THE DIARY OF AN INTROVERT)

 19Apr2014                                                                                                                              2:30 AM


   தற்காக நான் பிறந்தேன்? சாவதற்காகவா? சாதிப்பது எதற்கு? ஏன் ? எப்படி? ஆன்மீகத்திலோ அறிவியலிலோ விடை கிடைக்குமா? பிறந்ததற்காக சாவதுதான் வாழ்வா? இல்லை வேறா? கனவில் மட்டுமே வாழத் தெரிந்த எனக்கு இந்த நிஜ உலகம் ஏன் துளி கூட பிடிக்கவில்லை?. சில நேரம் நான் இந்த சமூகத்திற்கு ஏற்றவனில்லை எனத் தோன்றுகிறது. பல நேரங்களில் இந்த சமூகம் எனக்கு ஏற்றதில்லை எனத் தோன்றுகிறது. இந்த நடைமுறை நிஜ வாழ்வு எனக்கு அர்த்தமற்றதாக தொனிகிறது.
ஆனால், என் கனவுலகம் இதைப் போன்றது இல்லை. அதில் நான் மட்டுமே! அந்த உலகத்தின் அற்புதங்களை ஒவ்வொன்றாக நான் ரசிப்பேன். பூமியின் ஒரு இடத்திலிருந்து பிரபஞ்சத்தின் மற்றொரு மூலை வரை சென்று ரசிப்பேன் ஒரே நொடியில். நான் கற்பனையில் வாழ்பவன்.
நிலவின் பிரகாசத்தை கண் இமைகள் மூடாமல் பார்க்கத் தெரிந்த எனக்கு, அது ஏன் அத்தனை வசீகரம் எனப் புரியவில்லை. ஒவ்வொரு நொடியும் நான் இயற்கையின் அற்புதங்களை கண்டுணரும்போது ஆயிரம் கேள்விகள் விடை அற்றவையாக அகத்தினுள் எழுகின்றன. “அனைத்திற்கும் காரண காரியம் உண்டு”. எங்கோ வாசித்தது நினைவைத் தட்டுகிறது. ஆனால் காரணமும் காரியமும் யார் அறிவார்?.
அர்த்தம் தெரியாத வாழ்விற்கு இந்த உலகம் கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் வகை வகையாக வகுத்து வைத்துள்ளது. மனித இனம் தன்னை தொடர்ந்து தக்க வைத்துள்ளது  டார்வினின் “தகுந்தன தப்பிப் பிழைத்தல்” கோட்பாட்டின் படி. ஆனால் தாமும் இயற்கையின் ஒரு அங்கம் என்பதை என்றோ மறந்து விட்டோம் நாம். மனிதன் என்பது விலங்கினத்தின் ஒரு பிரிவு என்பதை நம் மனம் மறுதளிக்கின்றது.
நாடு , மொழி , மதம் என நமக்குள்ளே பிரிவுகளை உருவாக்கி நாடகம் நடத்திக் கொண்டிருக்கின்றோம்.
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதத்தில் தொழில் நுட்பமும் அறிவியலும் வளர்ச்சி அடைந்துள்ளது.இன்னும் இருக்கும் போர்களும் போரட்டங்களும்  ஏழ்மையும் ஏகாதிபத்தியமும் பசியும் பழிஉணர்வும் மனித இனத்தின் ஆறாம் அறிவினை பறைசாற்றுகின்றன.
பார்வை விசாலமக இருந்திருந்தால் இவற்றிற்கெல்லாம் இடமளித்திருக்க மாட்டோம் நாம். கோடானு கோடி உயிரினங்களில் மனித இனம்  ஒன்று . அவ்வளவுதான். நம்மை நாமே முதன்மைப் படுத்திக் கொண்டு இயற்கை மீது சர்வாதிகாரம் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றோம். அத்தனைக்கும் விளைவு வெளிப்படும் ஒரு நாள் நிச்சயம் உண்டு என்பதை மறந்து விட்டே நடை போடுகின்றோம்.
அத்தனை நாடுகளும் சேர்ந்து தொழில் நுட்பத்தை வளர்த்திருந்தால் எத்தனையோ அற்புதங்களை செய்திருப்போம். தனித்தனியாக செய்த்ததால் நிலவு வரை எட்டிய நம் கால்கள் ஒன்றாக ஈடுபட்டிருந்தால் அடுத்த நட்சத்திரத்தின் கிரகத்தில் காலணி அமைத்து விவசாயம் செய்து கொண்டிருப்போம் இந்நேரத்திற்கு.
முடமான கல்வி முறை, முட்டாள்தனமான வாழ்க்கை முறை, ஆன்மீகத்திற்கும் கடவுள் என்ற கருத்திற்கும் வேறுபாடு தெரியாத உலகம், இத்தனைக்கும் இடையே இயல்பாக வாழ இறுக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றேன்.

கண் சிமிட்டும் விண்மீங்களைத் ஒரு முறை தொட்டுப் பார்க்க ஆசை உள்ளது அது முடியாத காரியம் என்று தெரிந்த போதிலும்.

-ரெ
 

Comments

Popular posts from this blog

பழந்தமிழர் வான் ஆராய்ச்சி

முடிவில்லாத தமிழ் நாகரிகம்

நான் ஏன் சராசரி ?